December 9, 2022

தீபாவளியால் தமிழகத்தில் மின்நுகர்வு சரிவு

சென்னை, அக்.26

பொது விடுமுறையால் தீபாவளி அன்று, தமிழக மின் நுகர்வு 20.67 கோடி யூனிட்டுகளாக சரிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுவே, இந்த ஆண்டில் குறைந்தபட்ச மின் நுகர்வு அளவாகும்.

தமிழகம் முழுதும் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்து இணைப்புகளுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. தமிழகம் முழுதும் ஒரு நாள் அதாவது, 24 மணி நேரமும் ஒட்டுமொத்தமாக பயன்படுத்தும் மின்சார அளவு மின்நுகர்வு எனப்படுகிறது. தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, கோடை காலத்தில் அதிகரிக்கிறது. அதன்படி, இந்தாண்டு ஏப்.29ல் மின் நுகர்வு 38.80 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாகும்.

இம்மாத துவக்கத்தில், பல மாவட்டங்களில் மழை பெய்தது. இருப்பினும், பண்டிகை சீசனால் அனைத்து தொழில் நிறுவனங்களும் முழுவீச்சில் செயல்பட்டதால், மின் நுகர்வு வழக்கமாகவே இருந்தது. தீபாவளியை கொண்டாட பலரும் இம்மாதம், 21ம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு சென்றபடி இருந்தனர். இதனால், 18ம் தேதி 30.28 கோடி; 19ல் 30.42 கோடி; 20ல் 29.98 கோடி யூனிட்களாக இருந்த மின் நுகர்வு, 21ல் 29.93 கோடி; 22ல் 28.71 கோடி; 23ல் 24.82 கோடி யூனிட்கள் என, குறைந்து வந்தது. தீபாவளி தினத்தன்று பொது விடுமுறை என்பதால், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் செயல்படவில்லை. சில நிறுவனங்கள் இயங்கினாலும், குறைந்த ஊழியர்க¼ள வேலைக்கு வந்தனர். இதனால், அன்று மின் நுகர்வு முந்தைய நாளை விட, 4.15 கோடி யூனிட் குறைந்து, 20.67 கோடி யூனிட்களாக சரிந்துள்ளது. இதுவே, இந்த ஆண்டின் குறைந்தபட்ச மின் நுகர்வு அளவாகும். இம்மாதம் 14ம் தேதி மின் நுகர்வு 30.94 கோடி யூனிட்களாக இருந்தது. இதையடுத்து, 10 நாட்களில் மட்டும் மின் நுகர்வு 10.27 கோடி யூனிட்கள் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love