December 9, 2022

திருவில்லிபுத்தூரில் புதிய கலை, அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டும் பணி: அமைச்சர் துவக்கி வைத்தார்

விருதுநகர், அக்.31

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் கிராமத்தில் ரூ.11.33 கோடி மதிப்பில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

திருவில்லிபுத்தூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சி.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. பி.காம் பி.ஏ தமிழ் ஆங்கிலம் பி.எஸ்.சி கணிதம் கணினி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சுமார் 850 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.11.33 கோடி புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தரைத்தளம் முதல்தளம் இரண்டாம் தளம் என மூன்று தளங்களுடன் அமைய உள்ளது. தரைத்தளத்தில் நிர்வாக அலுவலகம் மூன்று வகுப்பறைகள் நூலகம் நூலக அலுவலக அறை இரண்டு ஆசிரியர்கள் அறை இரண்டு துறைத்தலைவர்கள் அறை மற்றும் மாணவ மாணவியர்களுக்கான கழிவறைகள் என 1551 ச.மீ பரப்பளவிலும் முதல் தளம் 6 வகுப்பறைகள் 2 ஆய்வகங்கள் ஒரு கருத்தரங்கம் 2 துறை தலைவர்கள் அறை மற்றும் மாணவ மாணவியர்களுக்கான கழிவறை வசதிகள் என 1529 ச.மீ. பரப்பளவிலும்

இரண்டாம் தளம் 6 வகுப்பறைகள் உடற்கல்வி ஆசிரியர் அறை ஒரு ஆசிரியர் அறை மாணவ மாணவியர்களுக்கான கழிவறை வசதிகள் என 977 ச.மீ. என மொத்தம் 4057 ச.மீ பரப்பளவில் ரூ.11.33 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது. இந்த புதிய கலை மற்றும் அரசு கல்லூரி அமைவதால் உயர்கல்விக்கு செல்லும் இப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மாணவ மாணவியர்கள் பயன்பெறுவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்;.

Spread the love