சென்னை, ஜன.4
தமிழகத்தில் புதிதாக 92,721 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 11.5 சதம் அதிகமாகும்.
இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, 2025க்குள் அந்நோயை முற்றிலும்ஒழிக்கும் இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரைகாசநோயை குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்களையும் பூரண குணமாக்குவதாகவும், சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நடப்பாண்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்தபோது, நாடு முழுவதும் 23 லட்சம் பேருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 5.27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 92,721பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார்மருத்துவமனைகளில் 21,379பேரும், அரசு மருத்துவமனைகளில் 71,342 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 11.5 சதம் குறைவாக இருந்தது.அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் 83,145 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.காசநோய்க்கும், கொரோனா தொற்றுக்கும் ஒரேமாதிரியான அறிகுறிகள் இருப்பதால், பலர் முன்கூட்டியே பரிசோதனை செய்ததுகூட அந்நோய்பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம்என அதிகாரிகள் தெரிவி த்தனர்.