December 8, 2022

தமிழகத்தில் 22 கட்சிகள் செயல்படாதவை
தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை, நவ.5

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் 22 கட்சிகள் முகவரி உள்ளிட்ட விவரங்கள் கூட சரியாக இல்லாமல் செயல்படாத நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தமிழகத்தில் 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளில் தேர்தலில் போட்டியிடாதது, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது போன்ற தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், இது சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் அளித்த காலக்கெடு முடிந்த நிலையில், தமிழகத்தில் 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில், 23 கட்சிகள் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல், வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் விதிகளை பின்பற்றாமல் இருந்ததை தேர்தல் ஆணையம் கண்டறிந்தது.

23 கட்சிகளையும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளது. உரிய விளக்கம், கணக்குகள் காட்டும் பட்சத்தில் மீண்டும் பட்டியலில் இந்தக் கட்சிகளின் பெயர்கள் இணைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன. இந்த விளக்கம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல், வருமான வரி உள்ளிட்ட கணக்குகளையும் காட்டாததுடன், ஆணையத்தில் அளித்த முகவரியில் செயல்படாமல், தொடர்பு கடிதங்கள் திரும்பி வந்த நிலையில் இருந்த 22 கட்சிகள் செயல்படாத கட்சிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Spread the love