September 27, 2022

தமிழகத்தில் 2.45 கோடி வாக்காளர்கள்
ஆதார் -வாக்காளர் அட்டையை இணைத்துள்ளனர்

சென்னை, செப்.17

தமிழகத்தில் இதுவரை 2.45 கோடி வாக்காளர்கள், தங்களின் ஆதார் எண்களை, வாக்காளர் பட்டியலில் இணைக்க வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: தமிழகம் முழுதும், வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைப்பதற்காக, ஆதார் எண் சேகரிப்பு பணி, ஆக.1ல் துவங்கியது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்து வருகின்றனர். இப்பணி 2023 மார்ச் 31 வரை நடக்க உள்ளது.

ஓட்டுச்சாவடி அலுவலரிடம், ஆதார் எண் வழங்க முடியாதவர்கள், www.nvsp.in என்ற இணையதளம் வழியாக, வோட்டர் யஹல்ப் லைன் எனும் ‘மொபைல் ஆப்’ வழியாக, ஆதார் எண் பதிவேற்றம் செய்யலாம். இது குறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் இதுவரை, 2.45 கோடி வாக்காளர்கள், தங்கள் ஆதார் எண்களை, வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்காக வழங்கி உள்ளனர்.

இது, 40 சதம் ஆகும். பல ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்கள் ஓட்டுச்சாவடி பகுதியில், 100 சதம் ஆதார் எண் சேகரிப்பு பணியை முடித்துள்ளனர். வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் ஆதார் எண், தேர்தல் கமிசன் வழங்கிய மென்பொருள் வழியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆதார் எண் சேகரிப்பு பணி முழுமையானதும், வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி துவங்கும்.

அப்போது, ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தாலோ, அதில் எதை அகற்றலாம் என்ற விபரத்தை அறிய, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்பு கொள்வர். அரியலூர் மாவட்டத்தில், 61.5 சதம் ஆதார் எண்கள் பெறப்பட்டுள்ளன. இதேபோல் பல மாவட்டங்களில், ஆதார் எண் சேகரிப்பு பணி, 50 சதத்தை தாண்டிவிட்டது. 100 சதம் ஆதார் எண் சேகரிப்பு பணியை முடித்த, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love