September 27, 2022

தமிழகத்தில் பிஎஸ்என்எல் சேவை
பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சரிவு

சென்னை, செப்.17

தமிழகத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் முறையாக சேவை வழங்காததால், ஜூலை மாதத்தில் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 2.4 லட்சமும், நாடு முழுதும் 8.19 லட்சமும் சரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்துவோரின் விபரங்களை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, டிராய் மாதம்தோறும் வெளியிடும். தற்போது, ஜூலை மாதத்திற்கான விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.அதன்படி, தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் ஜூன் மாதத்தில், பிஎஸ்என்எல் மொபைல் போன் சேவை பயன்டுத்துவோரின் எண்ணிக்கை, 98.51 லட்சமாக இருந்தது. இது, ஜூலை மாதம் 96.11 லட்சமாக குறைந்து உள்ளது.இதன்படி, ஜூலை மாதத்தில் மட்டும், 2.4 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., சேவையில் இருந்து வெளியேறி உள்ளனர்.

தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திரா, கேரளா, புது தில்லி, உத்தரபிரதேசம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் எண்ணிக்கை சரிந்துள்ளது. நாடு முழுதும், 8.19 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறி உள்ளனர். பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2.52 கோடியாக உள்ளதாக, டிராய் தெரிவித்துள்ளது.

Spread the love