December 8, 2022

தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தித் திறன்
6,200 மெகா வாட்டை தாண்டியது

சென்னை, நவ.4

தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தித் திறன், 6,200 மெகா வாட்டை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களை, மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. எனவே, பெரிய நிறுவனங்கள் அதிக திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்பனை செய்கின்றன. மேலும், வீடுகளில் குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, மத்திய அரசு, 40 சதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. எனவே, பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, பலரும் குறைந்த திறனில் மேற்கூரை மின் நிலையங்களை அதிகளவில் அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில், செப்.30ம் தேதி நிலவரப்படி, நாடு முழுதும் உள்ள சூரியசக்தி மின் நிலையங்களின் மொத்த மின் உற்பத்தித் திறனை, தற்போது மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய நிறுவனங்கள், 5,805 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்துள்ளன.

மேலும், வீடுகள் போன்ற கட்டுமானங்களில் 368.50 மெகா வாட் திறனிலும்; 60 மெகாவாட் விவசாய நிலங்களிலும் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தித் திறன் 6,233 மெகா வாட் என்றளவில் உள்ளது. தேசிய அளவில் தமிழகம், சூரியசக்தி மின் உற்பத்தியில், நான்காவது இடத்தில் உள்ளது.

Spread the love