November 29, 2022

தனி நபர் வருவாய் 33.4 சதம் அதிகரிப்பு உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசு தகவல்

புது தில்லி, நவ.14

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் இந்திய மக்கள்தொகையின் தனி நபர் வருவாய் 33.4 சதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில் மத்திய அரசு மேலும் தெரிவித்திருப்பதாவது: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து கடந்த 8 ஆண்டுகளில் தனி மனித வருவாய் 33.4 சதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன்படி, பெரும்பான்மையான குடும்பங்கள், 2013-14ம் ஆண்டில் இருந்தது போன்று அல்லாமல், உயர் வருவாய் பிரிவினராக மேம்பட்டுள்ளனர். 2013-14 கிராமப்புற மக்கள்தொகையில் 75 சதத்தினரும், நகர்ப்புறங்களில் 50 சதத்தினரும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலை தற்போது குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளது.

மேலும், தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையிலான உணவுப் பொருள்களைப் பெற தகுதியில்லாத குடும்பங்களை நீக்காதது, மத்திய அரசுக்கு மிகப் பெரிய மானிய சுமையை ஏற்படத்தி வருகிறது. மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் இதுவரை 4.7 கோடி குடும்ப அட்டைகள் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டத்தின் கீழ் தேசிய அளவிலான பயனாளிகள் உச்ச வரம்பு 81.4 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 79.8 கோடி பேர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். சில மாநிலங்கள், அந்த மாநிலங்களுக்கான பயனாளி உச்சவரம்பை இன்னும் பூர்த்தி செய்யவில்லை. அந்த வகையில், இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் 1.6 கோடி பயனாளிகள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Spread the love