February 3, 2023

தனியார்மயமாகும் கண்டெய்னர் கார்ப்பரேசன் ஜனவரியில் ஏலம் தொடங்குகிறது

புது தில்லி, டிச.10

கண்டெய்னர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனத்தை, தனியார்மயமாக்க உள்ளதை அடுத்து, வரும் ஜனவரி மாதத்தில் அதற்கான ஏலம் தொடங்கும் என தகவல்கள் தெரிகிறது.

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டில், பங்கு விலக்கல் நடவடிக்கைகள் வாயிலாக ரூ.65 ஆயிரம் கோடியை திரட்ட, மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.

இருப்பினும், நடப்பு நிதியாண்டில், மார்ச் வரையிலான காலத்திற்குள் பெரியளவில் எந்த விற்பனையும் நடைபெறாது என கருதப்படுகிறது. அதனால், அரசு தன் வசம் இருக்கும் நிறுவனங்களின் சிறுபான்மை பங்குகளை விற்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

இலக்கை துரத்துவதை விட்டுவிட்டு, எங்கெங்கு அதிக லாபம் இருக்கிறதோ அந்த இடங்களில் மட்டும் பங்குவிலக்கலில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதுவரை பங்குவிலக்கல் நடவடிக்கையின் வாயிலாக, ரூ.28,383 கோடி திரட்டப்பட்டுள்ளது. பிஇஎம்எல், எச்எல்எல், லைப் கேர், ´ஷிப்பிங் கார்ப்பரேசன்’ ஆகிய நிறுவனங்களின் பங்குவிலக்கல் அடுத்த நிதியாண்டுக்கு தள்ளிப்போகிறது. மேலும், கண்டெய்னர் கார்ப்பரேசன் நிறுவனத்தை தனியார்மயமாக்குவது சம்பந்தமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரியில் ஏலம் கேட்க விரும்பும் நிறுவனங்கள், தங்கள் விருப்பத்தை தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love