February 3, 2023

ட்ரோன் கண்காணிப்பு அமைப்பு கொள்முதல் உற்பத்தியாளர்களிடம் தகவல் கேட்கிறது ராணுவம்

புது தில்லி, நவ.23

ஆளில்லா சிறியரக விமானங்களை கண்டறியும் அமைப்புகளைக் கொள்முதல் செய்வது தொடர்பாக உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்களிடம் இந்திய ராணுவம் தகவல் கோரியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் ட்ரோன்களின் ஊடுருவல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ட்ரோன்கள் வாயிலாக ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் உள்ளிட்டவை சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன.

அதைக் கருத்தில்கொண்டு எல்லைப் பகுதிகளில் ட்ரோன்களைக் கண்காணிப்பதற்கான அமைப்புகளைக் கொள்முதல் செய்ய இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது. அந்த அமைப்புகளை உள்நாட்டில் கொள்முதல் செய்வதற்கான தகவல்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து ராணுவம் கோரியுள்ளது. இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்ரோன்கள் கண்காணிப்பு அமைப்பின் 60 சத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ட்ரோன் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தால் உள்நாட்டு பாகங்களின் கட்டாயப் பயன்பாடு 50 சதம் வரை தளர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்லைப் பகுதிகளில் குறைந்த உயரத்தில் ஊடுருவும் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தும் திறன் கொண்ட ஆயுதங்களைக் கண்காணிப்பு அமைப்பில் பொருத்துவது தொடர்பாகவும் தகவல் கோரப்பட்டுள்ளது. ட்ரோன் கண்காணிப்பு அமைப்பு கொள்முதலானது திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love