November 29, 2022

டுவிட்டரில் ப்ளூ டிக் கணக்குகளுக்கு ரூ.660 கட்டணம்: எலான் மஸ்க் தகவல்

நியூயார்க், நவ.2

டுவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ப்ளூ டிக் வசதிக்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூலிக்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க், ரூ.3.61 லட்சம் கோடிக்கு அண்மையில் வாங்கினார். இதனையடுத்து டுவிட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர முயற்சித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்பட அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கம் செய்தார்.

இந்நிலையில், டுவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிப்பிடும் வகையில் ப்ளூ டிக் வசதி உள்ளது. இது அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட மிகவும் பிரபலமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ப்ளூ டிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இனி ரூ.1,600 கட்டணமாக வசூலிக்கப்படும் என செய்திகள் வெளியானது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது குறித்து தற்போது எலான் மஸ்க் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ப்ளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ப்ளூ டிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம் பெயர் தேடல் மற்றும் பதில்களில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நீண்ட நெடிய வீடியோ மற்றும் ஆடியோவை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றார். அதோடு விளம்பரங்கள் பாதியாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். ப்ளூ டிக் கட்டணமாக ரூ.1,600 வசூலிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் ரூ.660 ஆக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love