October 4, 2022

டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரியை மத்திய அரசு அதிகரித்தது

புது தில்லி, செப்.2

டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெயைக் குறைந்த விலைக்குப் பெற்று, சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசலாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வந்தன. அதனால், அந்நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டின.

சந்தையின் ஆதாய சூழலால், நிறுவனங்கள் ஈட்டிய பெரும் லாபத்துக்கு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு வரி விதித்து வருகிறது. சந்தை ஆதாய வரியானது இரு வாரங்களுக்கு ஒருமுறை சர்வதேச சந்தை சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 4வது கூட்டம் தில்லியில் அண்மையில் நடைபெற்றது. அதில், டீசல் ஏற்றுமதி மீதான வரியை லிட்டருக்கு ரூ.7ல் இருந்து ரூ.13.5-ஆக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது. அதேபோல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியும் லிட்டருக்கு ரூ.2ல் இருந்து ரூ.9-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரி டன்னுக்கு ரூ.13,300-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த வாரம் நிலவிய சூழலுக்கு ஏற்ப கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மீதான சந்தை ஆதாய வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்துவருவதால், அடுத்த கூட்டத்தில் நிறுவனங்கள் மீதான சந்தை ஆதாய வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Spread the love