January 24, 2023

டிசம்பர் மாதத்தில் மகாராஷ்டிர வங்கி லாபம் இருமடங்கு அதிகரிப்பு

மும்பை, ஜன.18

கடந்த டிசம்பர் மாதத்தில் பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிர வங்கியின் நிகர லாபம் இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மகாராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வங்கியின் நிகர லாபம் ரூ.775 கோடியாக உள்ளது. கடந்த 2021ம் ஆண்டின் அதே மாதத்தில் அது ரூ.325 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த முறை நிகர லாபம் இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

வங்கியின் நிர்வாக இயக்குநர் ஏ.எஸ். ராஜீவ் கூறுகையில், கடந்த டிசம்பரில் 138.76 சதம் நிகர லாப வளர்ச்சியைக் கண்டுள்ள வங்கி, செயல்பாட்டு வருவாயிலும் உயர்வைச் சந்தித்துள்ளது. 2021-இன் டிசம்பரில் ரூ.1,162 கோடியாக இருந்த வங்கியின் செயல்பாட்டு வருவாய், கடந்த டிசம்பரில் ரூ.1,580 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.

மேலும், இந்த லாப வளர்ச்சியை நடப்பு காலாண்டு முழுவதும் தொடரச் செய்யும் அதே நேரம், தற்போது 3.6 சதமாக உள்ள வங்கியின் நிகர வட்டி லாப விகிதத்தை அதே நிலையில் வைத்திருக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று அவர் கூறினார். மதிப்பீட்டு மாதத்தில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.3,893 கோடியிலிருந்து ரூ.4,770 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love