October 3, 2022

டிசம்பர் காலாண்டில் இந்தியன் வங்கி
ரூ.690 கோடி நிகர லாபம் ஈட்டியது

மும்பை, பிப்.8

இந்தியன் வங்கி டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.690 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான எஸ்.எல்.ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் வங்கியின் வரிக்குப் பிந்தைய தனிப்பட்ட லாபம் ரூ.690 கோடியாக இருந்தது. இது, வங்கி முந்தைய 2020-21ம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.514 கோடியுடன் ஒப்பிடும்போது 34 சதம் அதிகமாகும். வட்டி சாரா வருவாய் அதிகரித்ததன் காரணமாக மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் நிகர லாபம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

வங்கியின் செயல்பாட்டு லாபம் 16 சதம் அதிகரித்து 3,288 கோடியாக இருந்தது. வட்டி சாரா வருவாய் 36 சதம் அதிகரித்து ரூ.1,556 கோடியானது. கட்டணம் மற்றும் அந்நியச் செலாவணி வருமானம் முறையே 11 சதம் மற்றும் 32 சதம் அதிகரித்துள்ளன. வாராக் கடன் மீட்பு 111 சதம் உயர்ந்து ரூ.278 கோடியானது. 2021 டிசம்பர் இறுதி நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 9.04 சதத்திலிருந்து 9.13 சதமாகவும், நிகர வாராக் கடன் 2.35 சதத்திலிருந்து 2.72 சதமாகவும் அதிகரித்துள்ளது. 2021 டிசம்பர் 31 நிலவரப்படி வங்கி வழங்கிய மொத்த கடன் 3 சதம் அதிகரித்து ரூ.4,00,432 கோடியாகவும், திரட்டிய மொத்த டெபாசிட் 8 சதம் உயர்ந்து ரூ.5,62,575 கோடியாகவும் இருந்தது. நடப்பு நிதியாண்டில் கடன் வளர்ச்சி விகிதம் 8 முதல் 10 சதமாக இருக்கும் என்றார் அவர்.

Spread the love