January 22, 2023

டிசம்பரில் நாட்டின் ஆபரணங்கள் ஏற்றுமதி 11.25 சதம் சரிவு: ஜிஜேஇபிசி தகவல்

புது தில்லி, ஜன.18

கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டின் ரத்தினக் கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 11.25 சதம் சரிந்து ரூ.19,432.88 கோடியாக இருந்தது என்று ரத்தினக் கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் ரத்தினக் கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி ரூ.21,896.46 கோடியாக இருந்தது. 2022ம் ஆண்டின் அதே மாதத்தில் அது ரூ.19,432.88 கோடியாக உள்ளது. இது, 11.25 சத சரிவாகும்.

முந்தைய நவம்பர் மாதத்தில் ரத்தினக் கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி 2021ம் ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடும்போது 11.83 சதம் உயர்ந்து ரூ.19,855.17 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக டிசம்பர் மாதத்தில் தீபாவளிக்குப் பிந்தைய இடைவெளிக்குப் பிறகு ரத்தினக் கல் மற்றும் ஆபரண உற்பத்தி அதிகமாகும். அதன் எதிரொலியாக அந்த மாதத்தில் அவற்றின் ஏற்றுமதி 11.83 சத வளர்ச்சியைக் கண்டது. இதற்கிடையே, கடந்த 2022ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் ரத்தினக் கல் மற்றும் ஆபரணங்களின் மொத்த ஏற்றுமதி 6.28 சதம் வளர்ச்சி கண்டு ரூ.2,27,534.50 கோடியாக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,14,087.94 கோடியாக இருந்தது. எனினும், அமெரிக்க டாலர் மதிப்பில் 2022 ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் ரத்தினக் கல்-ஆபரண ஏற்றுமதி 0.73 சதம் சரிந்து 2,860.82 கோடி டாலராக இருந்தது. இது, முந்தைய 2021-ஆம் ஆண்டின் இதே மாதங்களில் 2,881.99 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த டிசம்பர் மாதத்தில், வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 21.50 சதம் குறைந்து ரூ.10,472.92 கோடியாக (127.04 கோடி டாலர்) இருந்தது. இது, 2021-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ரூ.13,341.66 கோடியாக (177.06 கோடி டாலர்) இருந்தது. மேலும், வெட்டி மெருகூட்டப்பட்ட வைர ஏற்றுமதியில் உக்ரைன் போர் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பொருள்களின் ஏற்றுமதி 40 சதவீத சரிவைக் கண்டுள்ளது. அவற்றுக்கான தேவை ரஷியாவில் கடந்த 6 மாதங்களாகக் குறைந்து வருவதே இதற்கு முக்கியக் காரணமாகும் என்று ஜிஜேஇபிசி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love