September 27, 2022

டாடா மோட்டார்ஸ் வாகன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 36 சதம் அதிகரிப்பு

மும்பை, செப்.9

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் வாகனங்களின் மொத்த விற்பனை 36 சதம் அதிகரித்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 78,843-ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 57,995 வாகனங்களை விற்பனை நிறுவனம் செய்திருந்தது.

மேலும், நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 41 சதம் அதிகரித்து 76,479-ஆக இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 54,190-ஆக இருந்தது. உள்நாட்டு சந்தையில் கார்களின் விற்பனை கடந்த மாதம் 47,166 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்து விற்பனையான 28,018-உடன் ஒப்பிடுகையில் 68 சதம் அதிகமாகும்.

உள்நாட்டு சந்தையில் வர்த்தக வாகன விற்பனை கடந்த மாதம் 29,313-ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனையான 26,172 வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இது 12 சதம் அதிகமாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love