December 9, 2022

டாக்சி தொழிலில் முதலீடு செய்ய அதானி திட்டம்

மும்பை, அக்.27

அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு தொழில்களை செய்து வருகின்றன. தற்போது முதல் தர நகரங்களில் உள்ள அதானி ஏர்போர்ட்டுகளுக்கு தடையில்லா டாக்சி சேவை வழங்க அந்த தொழிலில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: அதானி குழும நிறுவனங்களில் ஒன்று தான் அதானி ஏர்போர்ட்ஸ். இந்நிறுவனம் மும்பை, ஆமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், கவுகாத்தி மற்றும் மங்களூர் ஆகிய விமான நிலையங்களை இயக்குகிறது. இதுதவிர, விமானப் பயணிகளை அதிகரிக்கக் கூடிய மற்ற நிறுவனங்களிலும் முதலீடு செய்து வருகிறது.

கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த பயண ரீடெய்ல் நிறுவனமான பியளமிங்கோவின் 74% பங்குகளை கையகப்படுத்தியது. இந்நிறுவனம் டியூட்டி ப்ரீ கடைகளை முக்கிய விமான நிலையங்களில் நடத்துகிறது. அதே போல் பிளிப்கார்ட் வசம் இருந்த ஆன்லைன் பயண ஏஜென்சியான கிளியர்டிரிப்பில் 20% பங்குகளை கடந்த ஆண்டு அதானி குழுமம் கைப்பற்றியது.

இந்நிலையில் தற்போது அதானி விமான நிலையங்கள் அனைத்திலும் தடையற்ற, பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை உறுதிசெய்ய டாக்சி தொழிலிலும் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ஆன்லைன் டாக்சி புக்கிங் நிறுவனமான ஊபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஏர்போர்ட்டிலிருந்து எங்கு வேண்டுமானாலும் தொடர்பை ஏற்படுத்தி தருவதன் மூலம் ஏர்போர்ட் தொழில் வளர்ச்சி அடையும் என்பது அதானி குழும உத்தியாக உள்ளது. ஏற்கனவே ஊபருடன் கூட்டமைத்து 5 அதானி ஏர்போர்ட்களில் பிரத்யேக ஊபர் பிக்அப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Spread the love