September 27, 2022

டயாலிசிஸ் சிகிச்சைக்கு மத்திய அரசின் வலைதள சேவையை பயன்படுத்த வேண்டுகோள்

புது தில்லி, செப்.9

டயாலிசிஸ் சிகிச்சைகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பிரதமரின் வலைதள சேவையைப் பயன்படுத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து ஆணையத்தின் செயலர் சந்தியா புல்லர் வெளியிட்ட செய்தி அறிக்கையாவது:

சிறுநீரக நோயாளிகளுக்கான டயாலிசிஸ் சிகிச்சைகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், அந்த சேவையை பிரதமரின் தேசிய டயாலிசிஸ் (பிஎம்என்டிபி) வலைதளத்தின் வாயிலாக பதிவு செய்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இதன் மூலம் அனைவருக்கும் தரமான சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அதுமட்டுமல்லாது, நாடு முழுவதும் டயாலிசிஸ் சிகிச்சை தொடா்பான தரவுகளையும், விவரங்களையும் சீராக வைத்திருக்க இயலும்.

பிஎம்என்டிபி வலைதளம் தற்போது அதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள், சந்தேகங்கள், தொழில்நுட்ப உதவிகளுக்கு தேசிய சுகாதாரத் திட்ட ஆதார மையத்தின் (என்ஹெச்எஸ்ஆர்சி) மருத்துவ தொழில்நுட்ப ஆலோசகர் ரஞ்சன் குமார் செளத்ரியை தொடர்பு கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love