October 3, 2022

ஜூலையில் சில்லரை விலை பணவீக்கம் 6.71 சதமாக குறைந்துவிட்டது: நிதியமைச்சர்

புது தில்லி, செப்.8

ஜூலையில் சில்லரை விலை பணவீக்கம் 6.71 சதமாக குறைந்துவிட்டது. வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தில்லியில் நடைபெற்ற இந்தியா ஐடியாஸ் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம், வருவாய் பகிர்வில் சமநிலை, வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும், நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. விலைவாசி உயர்வு என்பது இப்போது பெரிய பிரச்னையாக இல்லை. கடந்த சில மாதங்களில் விலைவாசியை சமாளிக்கும் அளவுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்றார்.

மேலும், ஜூலை மாதத்தில் சில்லரை விலை அடிப்படையிலான பணவீக்கம் 6.71 சதமாக குறைந்துவிட்டது. வட்டி விகிதத்தை பொறுத்தவரையில் ஆர்பிஐ சரியான முடிவுகளை எடுக்கும். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை வேகமாக உயர்த்தி வருவது கவனிக்கத்தக்கதாகும். ரஷியா-உக்ரைன் போரால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. எரிபொருள்களின் வரத்து தொடர்ந்து சுமுகமாக இருக்குமா என்பது தொடர்பாகவும் நிச்சயமற்ற சூழல் உள்ளது. நிதித் துறை உள்பட அனைத்து நிலைகளிலும் அமெரிக்காவுடனான உறவை இந்தியா வலுப்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love