December 8, 2022

ஜுலை-செப்டம்பர் காலாண்டில்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் லாபம் உயர்வு

சென்னை, அக்.28

கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 37 சதம் வளர்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வங்கியின் வருவாய் அதிகரிப்பு, வாராக் கடன் சரிவு ஆகிய காரணங்களால் நிகர லாபம் அதிகரித்துள்ளது.

இது குறித்து டிஎம்பி வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.262 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் வங்கி ரூ.191 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த காலாண்டில் நிகர லாபம் 37 சதம் அதிகரித்துள்ளது.

மேலும், மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,101 கோடியிலிருந்து ரூ.1,141 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.950 கோடியாக இருந்த வட்டி வருவாய் இந்த காலாண்டில் ரூ.997 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் 3.31 சதமாக இருந்த மொத்த வாராக் கடன், இந்த ஆண்டின் செப்டம்பர் மாத இறுதியில் 1.70 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. நிகர வாராக் கடனும் 1.82 சதவீதத்திலிருந்து 0.86 சதவீதமாக குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love