November 29, 2022

ஜன.20 வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் போக்குவரத்துதுறை அமைச்சர் தகவல்

சென்னை, நவ.17

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டு நவ.17ம் தேதி முதல் ஜனவரி 20-ம் தேதி வரை, சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. மேலும், இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைக் கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் TNSTC Official app. ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445017793, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்” என்று அமைச்சர் கூறினார்.

Spread the love