December 8, 2022

சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி பயன்பாடு: ஆர்பிஐ தகவல்

மும்பை, நவ.1

நாட்டின் முதல் டிஜிட்டல் ரூபாய் திட்டம் சோதனை அடிப்படையில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: உலகம் முழுவதும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு அதிகரித்ததையடுத்து, அதை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். தனியாரால் நிர்வகிக்கப்படும் கிரிப்டோகரன்சிகளை முறைப்படுத்துவது கடினம் என்பதாலும், அதில் பாதுகாப்பின்மை நிலவுவதாலும் ஆர்பிஐ சார்பில் எண்ம ரூபாய் வெளியிடப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது.

டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ஆர்பிஐ, அதற்கான கருத்துருவை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், டிஜிட்டல் கரன்சியானது சோதனை அடிப்படையில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ஆர்பிஐ அறிவித்தது. முதல்கட்டமாக அரசின் நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் இதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அரசு நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் வங்கிகள் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் மஹிந்திரா,யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி,ஹெச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிகளுக்கு சோதனை அடிப்படையிலான இதன் யன்பாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சில்லறை வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் கரன்சியின் சோதனை பயன்பாடு நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்றும் ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைகளின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியின் பயன்பாடு மேம்படுத்தப்பட்டு முழு நேரப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் செலாவணிகளுக்குக் கூடுதல் வலுசேர்க்கும் வகையில் இவை செயல்படும் என்றும், தற்போதைய செலாவணிகளுக்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி இருக்காது என்றும் ஆர்பிஐ ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love