October 3, 2022

செப்.19ல் பிரிட்டன் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு பாதுகாப்புப் பணிக்கு மட்டும் ரூ.59 கோடி செலவு

லண்டன், செப்.17

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், கடந்த 2021ம் ஆண்டில் மறைந்த அவரது கணவர் பிலிப்பின் உடலுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19ம் தேதி நடக்கவிருக்கின்றன. அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பணிகளுக்கு மட்டும் ரூ.59 கோடி நிதி செலவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளிவந்துள்ள செய்தியாவது: ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்காக செலவிடப்படும் தொகை, பிரிட்டன் வரலாற்றில் ஒரே நாளில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட மிகப்பெரிய தொகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் நல்லடக்கம் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட செய்தி அறிக்கையில், பல்வேறு இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அரசியின் உடல் அவரது கணவர் இளவரசர் பிலிப்பின் உடலுடன் மன்னர் 6-ஆம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாரம்பரிய முறைப்படி குதிரை பூட்டிய பீரங்கி வண்டியில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மன்னர் சார்லஸ் மற்றும் அவர்களது மகன்கள் வில்லியம் மற்றும் ஹாரி உள்ளிட்டோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்றத்தில் அரசியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிச்சடங்கு குறித்தான நிகழ்ச்சி நிரலை பக்கிங்ஹாம் அரண்மனை வெளிட்டது. இறுதிச் சடங்கு செப்.19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அரச குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் கலந்துகொண்டு ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

Spread the love