December 8, 2022

செப்டம்பர் காலாண்டில் யூனியன் வங்கி லாபம் ரூ.1,848 கோடியாக அதிகரிப்பு

மும்பை, அக்.25

மத்திய அரசுக்குச் சொந்தமான யூனியன் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.1,848 கோடியாக வளர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து யூனியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,848 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில், இது 52 சதம் அதிகமாகும். மேலும், மதிப்பீட்டு மாதங்களில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 21.61 சதவீதம் அதிகரித்து ரூ.8,305 கோடியாக உள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கி ரூ.2,900 கோடி புதிய வாராக் கடனை எதிர்கொண்டது. ஆனால் மீட்பு செயல்முறைகள் மூலம் ரூ.5,100 கோடி மீட்கப்பட்டது, இதில் ரூ.1,700 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டுமே வந்துள்ளது. மதிப்பீட்டு மாதங்களில் வட்டி வருவாய் 17.81 சதவீதம் அதிகரித்து ரூ.19,682 கோடியாகவும், வட்டி செலவினங்கள் 15.2 சதவீதம் உயர்ந்து ரூ.11,377 கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love