November 28, 2022

செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஐஓபி நிகர லாபம் 33 சதம் அதிகரிப்பு

சென்னை, நவ.8

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் நிகர லாபம் 33.2 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஐஓபி வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.501 கோடியாகும். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ரூ.376 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் 33.2 சதம் உயர்ந்துள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ.893 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கியின் நிகர லாபம் ரூ.703 கோடியாக இருந்தது. மதிப்பீட்டு மாதத்தில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,852.45 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகடத்தில் இது ரூ.5,028 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர வாராக் கடன் கடந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் 2.77 சதவீதமாக இருந்தது. அது, நடப்பு நிதியாண்டின் இதே மாதங்களில் 2.56 சதமாக சரிந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love