February 2, 2023

சென்னை விமான நிலையத்தில் நவீன முனையம் பசுமை தரத்தில் 4 நட்சத்திர குறியீடு பெற்றது

சென்னை, ஜன.20

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன முனையத்திற்கு, ஒருங்கிணைந்த வசிப்பிட மதிப்பீட்டுக்கான பசுமை தரத்தில், நான்கு நட்சத்திர குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: சென்னை விமான நிலையத்தில், ரூ.2,400 கோடி மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில், நவீன முனையம் கட்டப்பட்டு வருகிறது.

இதன் வாயிலாக, விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணியரின் எண்ணிக்கை, 1.7 கோடியில் இருந்து, 3.5 கோடியாக அதிகரிக்கும். மொத்தம், ஐந்து தளங்கள் இந்த புதிய முனையத்தில் அமைகின்றன. வருகை, புறப்பாடு என, இரு பிரிவுகளிலும், தானியங்கி முறையில் உடமைகளை அனுப்பும் கருவிகள், 28 நிறுவப்பட்டுள்ளன.

மேலும், சென்னை விமான நிலையத்தில் முதன் முதலாக, ஸ்கைலைட் சிஸ்டம் எனும் அதிகஅளவு சூரிய வெளிச்சம் வருவதற்கான பிரத்யேக வடிவமைப்புகள், 6 மீட்டர் வட்ட வடிவில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மின் பயன்பாடு அதிகளவு குறையும். மேலும், சென்சார் வாயிலாக விளக்குகள் எரியும் வசதிகள் செய்யப்பட்டு, புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பயன்படுத்தப்பட உள்ளது. இது தவிர, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, மறுசுழற்சி முறையில் அந்த நீர் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால், சுற்றுச்சூழல் தாக்கம் குறையும். இத்தகைய முயற்சிகளுக்காக, ஒருங்கிணைந்த வசிப்பிட மதிப்பீட்டுக்கான பசுமை தரத்தில், நான்கு நட்சத்திர குறியீடு வழங்கப்பட்டுள்ளது என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love