December 9, 2022

சென்னை புது நவீன விமான முனையம் டிசம்பர் மாதத்தில் திறப்பு

சென்னை, நவ.17

சென்னையில், புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன விமான முனையம், அடுத்த மாதம் திறக்கப்படும் என, விமான நிறுவனங்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: சென்னை விமான நிலையத்தில், ரூ.2,400 கோடி மதிப்பில், ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி, 2018 செப்டம்பரில் துவங்கியது. மொத்தம், 2.36 லட்சம் சதுர மீட்டரில் அமையும் முனையம் வாயிலாக, ஆண்டுதோறும் பயன்பெறும் பயணியர் எண்ணிக்கை, 1.7 கோடியில் இருந்து, 3.5 கோடியாக உயரும். மேலும், இந்த விமான முனையம், அடுத்த மாதம் கண்டிப்பாக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

சென்னை விமான நிலைய இயக்குனர் தலைமையில், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிஐஎஸ்எப் அதிகாரிகள் உட்பட, பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பயணியருக்கு செய்து தர வேண்டிய வசதிகள், புதிய நவீன முனையம், அடுக்குமாடி வாகனம் திறப்பு ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், புதிய நவீன முனையம் அடுத்த மாதம் கண்டிப்பாக திறக்கப்படும்; அப்போது, அடுக்கு மாடி வாகன நிறுத்தமும் திறக்கப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Spread the love