September 27, 2022

சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து 3,658 மெ.வா. மின்சாரம் கொள்முதல்

சென்னை, செப்.15

தமிழக மின் வாரியம், எப்போதும் இல்லாத அளவாக, சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, 3,658 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள், 5,200 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சாதகமான வானிலை, நம் நாட்டில் நிலவுகிறது.

இதனால், தமிழகத்தில் பலரும் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், மின் வாரியம், மழை தவிர்த்த மற்ற நாட்களில் சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக, 2,500 மெகா வாட் மின்சாரமும், அதிக வெப்பம் உள்ள நாட்களில், 3,000 மெகாவாட் வரையும் கொள்முதல் செய்கிறது.நடப்பாண்டு, மார்ச் 1ல் 3,633 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.இதுவே கடந்த செவ்வாய் வரை, உச்ச அளவாக இருந்தது. தற்போது, தென் மாவட்டங்களில் வெயில் கடுமையாக உள்ளது. இதையடுத்து எப்போதும் இல்லாத வகையில், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து அதிக அளவாக 3,658 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின் வாரியம் சாதனை படைத்துள்ளது.

Spread the love