December 8, 2022

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் அதிகரிப்பு

சென்னை, அக்.31

சுந்தரம் குழுமத்தைச் சேர்ந்த நிதி நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டுக்கான தனது நிகர லாபத்தில் 27 சதம் வளர்ச்சியைக் கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.50.3 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.39.7 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகரலாபம் 27 சதம் அதிகரித்துள்ளது. மேலும், மதிப்பீட்டு காலாண்டுக்கான பட்டுவாடாவும் முந்தைய நிதியாண்டின் அதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 18% அதிகரித்து ரூ.940 கோடியாக இருந்தது. கடந்த முறை நிறுவனத்தின் பட்டுவாடா ரூ.797 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் மதிப்பு செப்டம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.10,000 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டியது. கடந்த செப். 30ம் தேதி நிலவரத்தின்படி நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.10,176 கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love