December 8, 2022

சர்வதேச விமானங்களில் பிரீமியம் எக்கானமி பிரிவு
பயணச் சீட்டுகள் அறிமுகம் செய்கிறது ஏர் இந்தியா

மும்பை, நவ.21

தனது பெரிய வகை சர்வதேச விமானங்களில் பிரீமியம் எக்கானமி பிரிவு பயணச் சீட்டுகளை அறிமுகப்படுத்த டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநரான கேம்பல் வில்சன் தெரிவித்திருப்பதாவது: ஏர் இந்தியாவை மீட்டெடுப்பதற்காக நீண்ட கால மற்றும் குறுகிய கால திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம்.குறுகிய கால திட்டத்தின் ஒரு பகுதியாக, விமானங்களின் தரை விரிப்புகள், ஜன்னல் திரைகள், இருக்கைகள் மற்றும் அவற்றின் உறைகளை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன், பழுதாக இருக்கும் இருக்கைகளும், கேளிக்கை சாதனங்களும் கூடிய விரைவில் சரிசெய்யப்படும் என்றார். அளவில் பெரிய சர்வதேச விமானங்களில் பிரீமியம் எக்கானமி பிரிவு உருவாக்கப்படும். நீண்ட கால நோக்கில் டாடா டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவோம். மேலும், இதன் மூலம், விமானங்களுக்குத் தேவையான பாகங்களை நாங்க¼ள சுயமாக தயாரித்துக் கொள்ள முடியும். இந்திய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சந்தையில் 30 சதம் இடம் பிடிப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம். இன்னும் 10 ஆண்டுகளுக்குள் சர்வதேச விமானப் போக்குவரத்தில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிய இந்தியாவுக்கும் இந்தியன் ஏர்லைன்ஸுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றார்.

Spread the love