February 3, 2023

சபரிமலைக்கு இதுவரை ரூ.52.55 கோடி வருவாய்

சபரிமலை, நவ.28

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 12 நாள்களில் ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது. 

இது குறித்து விரிவான செய்தியாவது:

இதுகுறித்து தேவஸம் போர்டு அனந்த கோபன் தெரிவித்துள்ளதாவது: சபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாதப் பிறப்பு வரை மண்டல – மகர விளக்கு காலங்களில் ஐயப்பனை தரிசிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து இரண்டு மாதங்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில், மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 12 நாள்களில் கனமழையைத் தாங்கிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மலை வரை மலையேறி கோயிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை சுமார் 5.29 லட்சம். பக்தர்கள் மூலம் ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.9.92 கோடி வருவாய் கிடைத்தது. 

பிரசாதங்களான அப்பம் மூலம் ரூ.2.58 கோடியும், அரவணை மூலம் ரூ.23.57 கோடியும், காணிக்கையாக ரூ.12.73 கோடியும் கிடைத்துள்ளது. இந்த காலத்தில் கிடைக்கும் வருமானத்தில் நான்கில் மூன்று பங்கு விழாவை நடத்துவதற்கு செலவிடப்படுகிறது. மேலும், 51 லட்சம் கண்டெய்னர் அரவணை உள்பட பிரசாதம் தற்போது வாரியத்திடம் போதுமான அளவு இருப்பு உள்ளது, இது அடுத்த 20 நாள்களுக்கு போதுமானதாக இருக்கும். நாள்தோறும் சுமார் 2.5 லட்சம் கண்டெய்னர்களில் அரவணை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

Spread the love