January 28, 2023

கூகுள் பே, போன் பே முதலான யுபிஐ செயலிகளில்
பரிவர்த்தனைக்கு வரம்பு: விரைவில் அமலாகிறது

சென்னை, நவ.24

கூகுள் பே, போன் பே உட்பட யுபிஐ செயலிகளில் மேற்கொள்ளப்படும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளுக்கு விரைவில் லிமிட் செய்யும் சூழல் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான பணிகளை இந்தியாவில் யுபிஐ டிஜிட்டல் சிஸ்டத்தை கவனித்து வரும் தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, ஆர்பிஐயுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்களுக்கான அளவீடு தொடர்பான வரம்பைக் கட்டுப்படுத்துவதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் 31ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. அதனால் இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது.

மேலும், கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பீம் என பல்வேறு செயலிகளின் மூலம் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இதற்கு வங்கி கணக்கு மட்டுமே அடிப்படை. இந்த சூழலில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வரம்பு விதிக்கும் நடைமுறை விரைவில் அமலாக உள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் இது தொடர்பான இறுதி முடிவு வெளிவந்தால் மட்டுமே முழு விவரங்கள் தெரியவரும்.

தற்போது கூகுள் பே மற்றும் போன் பே என இரண்டும் இந்திய சந்தையில் சுமார் 80 சத பங்கை கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனை 30 சதமாக கொண்டு வர வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா முன்மொழிந்துள்ளதாக தெரிகிறது. அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்பது யுபிஐ சேவை வழங்கி வரும் செயலி வழக்குநர்களின் கோரிக்கையாக உள்ளது.

Spread the love