October 4, 2022

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு அக்.1 முதல் ஆர்பிஐ புதிய நடைமுறை அமல்

மும்பை, செப்.16

கிரெடிட் மற்றும் டெபிட் போன்ற பண அட்டைகளின் விவரங்களை பாதுகாக்கும் வகையில் இணையதள வழியில் பயன்படுத்துவதற்கு தனி அடையாளப்படுத்தும் முறையை ஆர்பிஐ கட்டாயமாக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, இந்த டோக்கனைசேசன் முறைக்கு கடந்த ஜூலை 1ம் தேதியை ஆர்பிஐ நிர்ணயித்திருந்த நிலையில், தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்படுத்த வணிகர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால், நடைமுறைப்படுத்தும் தேதி அக்டோபர் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், பண அட்டைகளுக்கு டோக்கனைசேசன் முறை கொண்டு வரப்பட்டால், ஒரு பண அட்டை என்பதை அதன் சிவிவி எண் போன்ற விவரங்களைக் கொண்டு அறியும் முறைக்கு மாற்றாக, அந்தப் பண அட்டைக்கென்று வழங்கப்படும் டோக்கன் எண் மூலம் அறியப்படும். இந்த டோக்கன் எண் என்பது, அந்த அட்டையின் விவரங்கள் மற்றும் டோக்கனைசே­ன் கோரிக்கையை மேற்கொள்ளும் நிறுவனத்தின் விவரங்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாக இருக்கும்.

இந்த டோக்கன் எண் என்பது, அந்த அட்டையின் நேரடியான விவரங்களைக் கொண்டிருக்காது. இணையதள பணப்பரிவர்த்தனையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த டோக்கன் எண் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஒரு கிரெடிட் அல்லது டெபிட் அட்டை டோக்கனைசேசன் செய்யப்பட்டுவிட்டால், அந்த அட்டையின் விவரங்களை, வணிகர்களோ, பணப் பரிமாற்ற செயலிகளோ, இணையதள விற்பனை நிறுவனங்களோ, அந்த அட்டையின் சிவிவி எண், அந்த அட்டை காலாவதியாகும் தேதி மற்றும் இதர விவரங்களையும் சேமித்து வைத்துக் கொள்ள முடியாது.

ஏற்கனவே, வங்கிகள் அல்லது ஆன்லைன் வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு பண அட்டையை டோக்கனைசேசன் செய்யும் முறை குறித்து தகவல்களை அனுப்பியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love