October 2, 2022

கால்நடை விவசாயிகளுக்கு உதவும் புதிய கைபேசி செயலி

நமது நாட்டில் 300 மில்லியன் அளவிற்கு கால்நடைகள் உள்ளன. இவற்றின் உரிமையாளர்களாக 90 சதவீதம் பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள் உள்ளனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ள இந்தப் பிரிவினர் பலர் கல்வியறிவு குறைந்தவர்களாகவும், குறைந்தளவு போக்குவரத்து வசதிகள் கொண்ட கிராமப் புறங்களில் வசிப்பவர்களாகவும் உள்ளனர். இத்தகைய நடைமுறைச் சூழலில் சிறு மற்றும் குறு கால்நடை விவசாயிகளுக்கு உதவும் வண்ணமும், கால்நடை பண்ணையை திறம்பட எளிதாக நிர்வாகம் செய்யவும் அவர்களுக்கு உதவும் வண்ணம் ஒரு புதிய கால்நடை செயலி உருவாக்கப்பட்டு, பல சிறு மற்றும் குறு விவசாயிகளின் நடைமுறை பிரச்சனைக்குரிய தீர்வுகளை உடனடியாக வழங்கி வருகிறது, வளம் பெற்றுத் தரும் புதிய கால்நடை செயலி.

தற்போது தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய கால்நடை செயலி ‘Dvara surabhi Index (DSI)’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த செயலியை தங்களின் திறன் கைபேசிகளில் பதிவு இறக்கம் செய்து கொண்டு கால்நடை விவசாயிகள் தங்கள் கால்நடைகளின் புகைப்படங்களை அதில் பதிவு ஏற்றம் செய்த சில நொடிகளில் அவர்கள் கால்நடைகளின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படுகிறது.
கடந்த ஜூலை 2021 முதல் இயங்கி வரும் இக்கால்நடை செயலியை நாடு முழுவதும் உள்ள 55,000 கால்நடை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இலவசமாக கால்நடை விவசாயிகளுக்கு இந்த கால்நடை செயலி தனது சேவைகளை வழங்கி வரும் சூழலில் பல கால்நடை விவசாயிகள் தங்கள் கால்நடைகளின் உடல் நலம், அவற்றிற்கு வழங்கும் தீவனத்தின் அளவு மற்றும் தன்மை, கால்நடைகளுக்கு காப்பீடு பெறுவது, கால்நடை விவசாயிகளின் நிதி தேவைகளை சந்திக்க உதவுவது மற்றும் கால்நடை பண்ணை மேலாண்மை தீர்வுகள், புதிய கால்நடைகளை விலைக்கு வாங்கும்போது அவற்றுக்கு வழங்கும் கால்நடை தீவனத்தை மேலாண்மை செய்ய உதவுவது போன்ற பல சேவைகளை வழங்கி வருகிறது.
இந்தப் புதிய கைபேசி செயலியை உருவாக்கியுள்ள “Dvara E-Dairy solution” என்ற சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வேளாண் நிதி தொழில்நட்பம் சார்ந்த நிறுவனம் நமது நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தனது தொழில்நுட்ப ரீதியான விரிவாக்க சேவைகள் வாயிலாக பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அதிகாரம் பெற பெரிதும் துணை புரிந்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கால்நடை விவசாயிகள் இந்த புதிய கால்நடை செயலியை பயன்படுத்தி தங்கள் கால்நடை வளர்ப்பு, தீவன மேலாண்மை மற்றும் பண்ணை நிர்வாகத்தில் செயல்படுத்தி தங்களின் நடைமுறை பிரச்சனைகள், தேவைகளை சந்தித்து குறைந்த காலத்தில் அதிக லாபம் பெறலாம்.

தகவல் : முனைவர் தி.ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Spread the love