September 27, 2022

கார் பின் இருக்கையில் அமர்பவர்கள் சீட் பெல்ட்
அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்: நிதின் கட்கரி

புது தில்லி, செப்.6

காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாதவர்களுக்கு விரைவில் ரூ.1000 அபராதம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது ஏற்கெனவே போக்குவரத்து விதிமுறையில் உள்ளது. ஆனால் மக்கள் யாரும் அதனைப் பின்பற்றுவதில்லை. இனிமேல் முன் இருக்கையில் உள்ளவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் சைரன் ஒலிப்பதுபோல் பின் இருக்கையில் உள்ளவர்களும் சீட் பெல்ட் அணியாவிட்டால் சைரன் ஒலிக்கும் வகையில் கார்கள் வடிவமைக்கப்படும். மீறி சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும், காரில் பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாதவர்களிடம் ரூ.1000 வரை அபராதம் வசூலிக்கப்படும். இப்போதைக்கு முன் இருக்கைகளில் தான் ஏர் பேக் கட்டாயம் என்றுள்ளது. ஆனால் 2022 ஜனவரி முதலே அரசாங்கம் 8 பேர் அமரும் காரில் முன் இருக்கைகள் உட்பட மொத்தம் 6 ஏர் பேக் அமைக்குமாறு வலியுறுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பு குறித்து பிரபலங்களை வைத்து பிரச்சாரங்கள் செய்து வருகிறோம் என்றார்.

Spread the love