October 4, 2022

கார் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் மஹிந்திரா

மும்பை, செப்.21

நாட்டின் எஸ்யூவி கார் தயாரிப்பாளர்களில் மிகப்பெரிய நிறுவனமான மஹிந்திரா நிறுவனம், அதிகரித்து வரும் தேவையால் அதன் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, அதன் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 455,570 யூனிட்களை எட்டியுள்ளது. ஆகஸ்டில் மட்டும், அதிகபட்சமாக 29,516 யூனிட் எஸ்யூவிக்களை தயாரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 87 சதம் அதிகமாகும். இதன்மூலம், இந்தியாவின் பயணிகள் கார் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் எஸ்யூவி பிரிவில் மஹிந்த்ரா மிகவும் பேசப்படும் பிராண்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது. நடப்பு நிதியாண்டில், நிறுவனத்தின் எஸ்யூவிக்கள் 68 சத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி 400, ஸ்கார்பியோ மற்றும் தார் ஆகியவற்றின் மறுவடிவமைப்புகள் பிரபலமானதால் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.

மஹிந்த்ரா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனிஷ் ஷா இது குறித்து தெரிவித்துள்ளதாவது: எங்களது எஸ்யூவி, போர்ட்போலியோவில் வலுவான டிமாண்டை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறோம். உற்பத்தி திறனை இரட்டிப்பாக்குவதற்கான திட்டத்தை விரைவில் அறிவிப்போம். முடிந்தவரை டிமாண்டை பெறுவதில் மஹிந்திரா கவனம் செலுத்தும். 2026-27க்குள் மொத்த எஸ்யூவிக்கள் தயாரிப்பில் 20-30 சதம் மின்சார வாகனங்களாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love