December 9, 2022

கவுதம் அதானியின் சொத்தை நிர்வகிக்க வெளிநாட்டில் குடும்ப அலுவலகத்தை துவங்க திட்டம்?

புது தில்லி, நவ.19

கவுதம் அதானி, தன்னுடைய சொத்துக்களை நிர்வகிக்க வசதியாக, குடும்ப அலுவலகத்தை துபாய் அல்லது நியூயார்க்கில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து, வெளிவந்துள்ள தகவலாவது:

சமீப காலமாக, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் ரூ.4.76 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தன்னுடைய மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சொத்தை நிர்வகிக்க வசதியாக, குடும்ப அலுவலகத்தை அமைக்க விரும்புகிறார்.

மேலும், இந்த குடும்ப அலுவலகம் என்பது, தனிப்பட்ட நபர்களுக்கான சொத்துக்களை மட்டுமே நிர்வகிக்கும் பிரத்யேக அலுவலகமாகும். இந்த அலுவலகத்தை, துபாய் அல்லது நியூயார்க்கில் அமைக்க, அதானி விரும்புகிறார். சொத்தை நிர்வகிப்பதற்கான மேனேஜர் மற்றும் ஊழியர்களை பணியில் அமர்த்தும் முயற்சியும் துவங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியும், குடும்ப அலுவலகத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, செய்திகள் வந்த நிலையில், தற்போது அதானியும் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தகவல்கள் வெளிவந்த நிலையில், கவுதம் அதானி தரப்பிலிருந்து இது அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love