February 3, 2023

கட்டாய காப்பீடு விற்பனை கூடாது: எஸ்பிஐ அறிவுறுத்தல்

State Bank of India

புது தில்லி, ஜன.5

வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தி, காப்பீட்டு திட்டங்களை வாங்க வைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது என, எஸ்பிஐ அதன் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக, வங்கிகள் வாடிக்கையாளர்களை வற்புறுத்தி காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்து வருவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், இவற்றைத் தவிர்க்க, தேவையான வழிமுறைகளை வகுத்துக் கொள்ளுமாறு, பொதுத்துறை வங்கித் தலைவர்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. இது குறித்து நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: 2ம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், வங்கிகள், 75 வயதுக்கு மேலான வாடிக்கையாளர்களுக்கு கூட, அவற்றின் துணை காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகளை வாங்க அழுத்தம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், காப்பீட்டு திட்டத்தை வாங்க மறுக்கும் வாடிக்கையாளர்களிடம், தங்கள் மேலதிகாரிகள் அதிக அழுத்தம் கொடுப்பதாக கூறி, நம்ப வைக்க முயல்கிறார்கள். மேலும், வங்கிகளில் ஏதாவது ஒரு கடன் வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள், காப்பீட்டு திட்டங்களை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என வற்புறுத்தப்படுகிறார்கள்.

இதனால் வங்கிகளின் கள ஊழியர்கள் அழுத்தத்துக்கு ஆளாவதுடன், வங்கி, அதன் தரமான அடிப்படை வங்கிப் பணிகளை வழங்குவதும் பாதிக்கப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களை காப்பீட்டு திட்டங்களை வாங்க வற்புறுத்தும் நெறியற்ற நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபடக்கூடாது. இவ்வாறு நிதியமைச்சகம் வங்கித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, எஸ்.பி.ஐ., காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்ய, நெறியற்ற நடைமுறைகளை மேற்கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளது.

Spread the love