February 3, 2023

கடந்த 8 மாதத்தில் தெற்கு ரயில்வே
ரூ.6,506 கோடி வருவாய் ஈட்டியது

சென்னை, டிச.9

கடந்த எட்டு மாதங்களில், பயணியர் மற்றும் சரக்கு ரயில்கள் வாயிலாக, தெற்கு ரயில்வேக்கு 6,506 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா பாதிப்புக்கு பின், நாடு முழுதும் விரைவு, பயணியர், மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பயணியர் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரயில்வே வருவாய் அதிகரித்து வருகிறது. பயணியர் தேவை கருதி, போதிய அளவில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறோம். சரக்குகளை அதிகளவில் கையாளும் வகையில், சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்தி வருகிறோம். இதனால், வருவாய் அதிகரித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் பயணியர், சரக்கு ரயில்கள் வாயிலாக, 6,506 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில் பயணியர் ரயில்கள் வாயிலாக, ரூ.4,161 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.9 சதம் அதிகம். சரக்கு ரயில் போக்குவரத்து வாயிலாக, ரூ.2,345 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட 15.49 சதம் அதிகம். ரயில்களில் சரக்குகள் கையாளுவதும், 22 சதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

31 மின்தூக்கிகள் அமைக்க திட்டம்

நடப்பாண்டுக்குள் தென்னக ரயில்வேக்குக்குட்பட்ட ரயில் நிலையங்களில் 31 மின்தூக்கிகளும், 3 நகரும் படிகட்டுகளும் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 75, கேரளத்தில் 39, கர்நாடகத்தில் 4 என தெற்கு ரயில்வேயில் பல்வேறு ரயில்நிலையங்களில்118 மின்தூக்கிகள் இயங்கி வருகின்றன. நடப்பு நிதியாண்டில் எழும்பூர், பேசின் பாலம், திருச்சி ரயில் நிலையங்களில் தலா 3 மின்தூக்கிகள், கேரளத்தில் காயன்குளம் ரயில் நிலையத்தில் ஒன்று என 10 மின்தூக்கிகள் அமைக்கபட்டு வருகின்றன.மேலும் 31 ரயில் நிலையங்களில் மின்தூக்கிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2023-24 நிதி ஆண்டுக்குள் 122 மின்தூக்கிகள் அமைக்கப்படுவுள்ளன. ஒரு மின்தூக்கி அமைக்க சுமார் ரூ.50 லட்சம் செலவாகும். இதுபோல் கடந்த நவம்பர் வரை தமிழகத்தில் 93, கேரளத்தில் 39 மற்றும் கர்நாடகாவில் 2 என 134 நகரும் மின்படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்நிதி ஆண்டின் முடிவுக்குள் 3 நகரும் மின்படிகட்டுகளும், 2023-24 நிதி ஆண்டில் 7 நகரும் மின்படிகட்டுகளும் அமைக்கப்படவுள்ளன. ஓர் இடத்தில் மின்படிகட்டு அமைக்க சுமார் க ரூ. 1.1 கோடி செலவாகும். இதன் மூலம் நிமிடத்துக்கு 100 பயணிகள் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love