October 4, 2022

கடந்த 8 ஆண்டுகளில் ரூ.6.42 லட்சம் கோடி வாரா கடன்கள் வசூலாகியுள்ளது

புது தில்லி, செப்.19

மத்திய அரசின் தகவலின் படி 2014 – 15 நிதியாண்டிலிருந்து இதுவரை பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன்களாக இருந்த ரூ.6.42 லட்சத்தை மீட்டெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளிவந்துள்ள செய்திக்குறிப்பாவது: 2016 முதல் 2021 வரை பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு ரூ.3.36 லட்சம் கோடி மூலதனத்தை செலுத்தியுள்ளது. அதே நேரத்தில் சந்தையிலிருந்து ரூ.2.99 லட்சம் கோடியை வங்கிகள் திரட்டியுள்ளன. மேலும் பொதுத் துறை வங்கியின் புரொவிசன் கவேரஜ் விகிதம் எனப்படும் மோசமான கடன்களை ஈடுகட்ட வங்கிகள் ஒதுக்கும் தொகையானதுமார்ச் 2015 இறுதியில் 46 சதத்தில் இருந்து, 2022ல் 86.9 சதமாக மேம்பட்டுள்ளது.

மேலும், 2015 நிதியாண்டு முதல் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்கள் ரூ.5.17 லட்சம் கோடியும், ரிட்டர்ன் ஆப் செய்யப்பட்ட கணக்குகளிலிருந்து ரூ.1.24 லட்சம் கோடியும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. 2018 நிதியாண்டில் 14.6 சதமாக இருந்த பொதுத்துறை வங்கிகளின்ந் நிகர வாராக்கடன் விகிதம், தற்போது 2022ல் 7.4 சதமாக கிட்டத்தட்ட பாதியாக சரிந்துள்ளது.

மேலும், 12,265 பேர் வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 12,076 (98.5 சதம்) நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளன. 40% நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. 75.5 சதம் நபர்கள் மீது சர்பாசி சட்டத்தின் படி சொத்துக்களை ஏலம் விட்டு பணமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love