February 3, 2023

கடந்த 7 மாதங்களில் மொபைல்போன் ஏற்றுமதி
5 பில்லியன் டாலர் அளவை தாண்டியது?

புது தில்லி, டிச.6

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் மொபைல் போன் ஏற்றுமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரு மடங்குக்கும் அதிகமாக நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: மத்திய அரசு கொண்டுவந்துள்ள உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் தற்போது சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி ஒப்பந்த நிறுவனங்களான பாக்ஸ்கான், விஸ்திரான், பெகாட்ரான் ஆகியவையும், சாம்சங் நிறுவனமும் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் பலனடைந்து வருகின்றன. இதன் கானமாக இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது.

மேலும், நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் மொபைல் போன் ஏற்றுமதி 5 பில்லியன் டாலர் அளவைத் தாண்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 127 சதம் அதிகமாகும்.

2021ல் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி அளவு 2.2 பில்லியன் டாலராக இருந்தது. இதில் சாம்சங் நிறுவனத்தின் பங்களிப்பாக 90 சதமும், ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பாக 10 சதமும் இருந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியால், இந்த ஆண்டில் ஏப்ரல்-அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியின் மதிப்பு 12.14 பில்லியன் டாலராக உச்சத்தை தொட்டது. 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் மொத்த எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் மொபைல் போன்களின் பங்களிப்பு 30 சதமாக இருந்தது. 2022ல் இது 41 சதமாக உயர்ந்துள்ளது நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Spread the love