December 8, 2022

கடந்த 5 ஆண்டுகளில் துணை ராணுவப் படைகளுக்கு
2 லட்சம் இளைஞர்கள் தேர்வு: மத்திய அரசு தகவல்

புது தில்லி, நவ.8

கடந்த 5 ஆண்டுகளில் பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் உள்ளிட்ட 6 மத்திய துணை ராணுவப் படைகளுக்கு 2 லட்சம் பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியாவது:

கடந்த 5 ஆண்டுகளில் (2017-2021) மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎஃப்) அதிக அளவில் 1,13,208 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். சசஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) பிரிவில் 29,243 பேரும், எல்லை பாதுகாப்பு படையில் (பிஎஸ்எஃப்) 17,482 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எஃப்) 12,482 பேரும், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் பிரிவில் (ஐடிபிபி) 5,965 பேரும், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பிரிவில் (ஏஆர்எஃப்) 5,938 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் ஜூலை வரை மட்டும் 10,377 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரும் 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு பணி ஆணைகளை வழங்குவதற்கான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 22ம் தேதி தொடக்கிவைத்தார்.

இதன்படி, அதிக அளவிலான இளைஞர்கள் மத்திய துணை ராணுவப் படைகளுக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்படை பிரிவுகளில் கடந்த ஜூலை மாத நிலவரப்படி, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், இவை வரும் 2023ம் ஆண்டு டிசம்பருக்குள் நிரப்பப்படும் எனவும் மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Spread the love