February 3, 2023

கடந்த 2021-22ம் நிதியாண்டில் ரூ. 614.53 கோடியை
நன்கொடையாக பெற்றது பாஜக: தேர்தல் ஆணையம்

புது தில்லி, நவ.30

கடந்த 2021-22 நிதியாண்டில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக ரூ. 614.53 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது காங்கிரஸ் பெற்ற ரூ. 95.46 கோடியை விட 6 மடங்குகள் அதிகமாகும்.

இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டின் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும், கடந்த நிதியாண்டில் நன்கொடையாகப் பெற்ற நிதி விவரங்களை அறிக்கைகளாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன. அது குறித்தான தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, 2021-22-இல் பாஜக ரூ. 614.53 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது. காங்கிரஸ் ரூ. 95.46 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.

மேலும், மேற்குவங்கத்தில் ஆட்சிப் புரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நன்கொடையாக பெற்ற நிதி ரூ. 43 லட்சமாகும். கேரள மாநிலத்தின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் ரூ. 10.05 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இவ்விரு மாநிலங்களுக்கும் கடந்த 2021ல் மார்ச்-மே மாதங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சிப் புரிந்து வரும் ஆம் ஆத்மி கட்சி, கடந்த நிதியாண்டில் ரூ. 44.54 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. தனிநபர்கள், நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தேர்தல் அறக்கட்டளைகளும் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. புரூடண்ட் தேர்தல் அறக்கட்டளை பாஜகவுக்கு அதிக அளவில் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

Spread the love