September 27, 2022

கடந்த 2021ம் ஆண்டில் இணையவழி குற்றங்கள் இந்தியாவில் 5 சதம் அதிகரிப்பு: என்சிஆர்பி தகவல்

புது தில்லி, செப்.1

இந்தியாவில் இணையவழியில் நடைபெறும் குற்றங்கள் கடந்த ஆண்டில் 5 சதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 15 சதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 2020-ஆம் ஆண்டு 50,035-ஆக இருந்த இணையவழிக் குற்றம் தொடர்பான புகார்கள், 2021-ஆம் ஆண்டில் 52,974-ஆக அதிகரித்துள்ளது. 2019ல் 44,735 இணையவழிக் குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

இது குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2021ம் ஆண்டில் தெலங்கானா, உத்தரபிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளன. பதிவாகும் குற்றங்களில் மூன்றில் ஒன்றுக்குதான் காவல் துறையினரால் தீர்வு காண முடிகிறது.

மேலும், இணையவழிக் குற்றங்களில் 60.8 சதம் நிதி உள்ளிட்ட மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உள்ளது. இதற்கு அடுத்து 8.6 சதம் பாலியல் ரீதியான இணையவழிக் குற்றங்கள் ஆகும். 5.4 சதம் மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற குற்றங்கள் ஆகும். தெலங்கானாவில் அதிகபட்சமாக 10,303 இணையவழிக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராகவும் இணையவழியில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. தகவல் திருட்டு, டெபிட், கிரெடிட் கார்டு மோசடிகள் இணையவழியில் நடப்பது அதிகம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love