October 4, 2022

கடந்த நிதியாண்டில் வழிபாட்டுத் தலங்களுக்கான
இந்தியர்களின் காணிக்கை ரூ.16,600 கோடி: ஆய்வு தகவல்

புது தில்லி, செப்.20

கடந்த 2021-22ம் நிதியாண்டில் வழிபாட்டுத் தலங்களுக்கு இந்திய குடும்பங்கள் காணிக்கையாக வழங்கிய தொகை சுமார் ரூ.16,600 கோடி என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது குறித்து அசோகா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 18 மாநிலங்களில் உள்ள 81,000 குடும்பங்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நிதியாண்டில் இந்திய குடும்பங்கள் ரூ.23,700 கோடியை நன்கொடையாகவும், காணிக்கையாகவும் வழங்கியுள்ளன. அதில் அதிகபட்சமாக மத வழிபாட்டுத் தலங்களுக்கு ரூ.16,600 கோடியை வழங்கியுள்ளன. இது ஒட்டுமொத்த காணிக்கையில் 70 சதமாகும்.

மேலும், 64 சதவீத குடும்பங்கள் வழிபாட்டுத் தலங்களுக்கும், 61 சதவீத குடும்பங்கள் பிச்சைக்காரர்களுக்கும் நன்கொடை வழங்கியுள்ளன. மத வழிபாட்டுத் தலங்களுக்கு பணத்தையே அதிக அளவில் காணிக்கையாக இந்தியர்கள் வழங்கியுள்ளனர். மதம் சார்ந்த நம்பிக்கையே இந்தியர்களுக்கு ஊக்கமளித்து வருவது இந்த ஆய்வின் மூலமாகத் தெரியவருகிறது. வறுமையில் வாடுவோருக்கு தானம் வழங்கும் பாரம்பரியத்தையும் இந்திய குடும்பங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன. நாட்டிலேயே தென்னிந்திய மாநிலங்களில் வசிப்போர் மிக அதிகமாக நன்கொடை வழங்கி வருகின்றனர். அதற்கடுத்த இடத்தில் மேற்கு இந்திய மாநிலங்கள் உள்ளன. அதே வேளையில், கிழக்கு மற்றும் வடக்கு இந்திய மாநிலங்களின் குடும்பங்கள் அதிக முறை காணிக்கைகளை வழங்கியுள்ளன என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love