புது தில்லி, ஜன.17
நாட்டின் வேளாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பத் துறையில் புதிய முதலீடு கடந்த நிதியாண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அக்ஃபண்டர், “ஆம்னிவோர்’ ஆகிய நிறுவனங்களின் சந்தை ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளதாவது:
2022ம் நிதியாண்டில் வேளாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த புத்தாக்க தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகை 460 கோடி டாலர் ஆகும். இது, முந்தைய 2021ம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 119 சதம் அதிகமாகும். அதே பேல், 2021ம் நிதியாண்டில் வேளாண் – உணவு தொழில்நுட்பத் துறையில் 189 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 234-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், புத்தாக்க நிறுவனங்களில் ஒட்டுமொத்த முதலீடு அதிகரித்து வந்தது வேளாண்-உணவு தொழில்நுட்பத் துறையில் புதிய முதலீடுகளை ஊக்குவித்தது. கடந்த நிதியாண்டில் புத்தாக்க நிறுவனங்கள் மொத்தம் 380 கோடி டாலர் மூலதனத்தை திரட்டின. இது, முந்தைய 2021ம் நிதியாண்டில் திரட்டப்பட்ட 177 கோடி டாலரோடு ஒப்பிடுகையில் 115 சதம் அதிகமாகும். இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி திரட்டிய 120 கோடி டாலர் மூலதனம் முக்கிய பங்கு வகித்தது. இது, உணவுதொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டில் 26 சதம் ஆகும்.
மேலும், கடந்த நிதியாண்டில் அதிக முதலீட்டைக் கவர்ந்த புத்தாக்க தொழில் நிறுவனங்களில் உணவகங்கள் மற்றும் இணையவழி மளிகை வர்த்தக நிறுவனங்கள் முன்னிலை வகித்தன. இந்த இரு பிரிவுகளிலும் முறையே 190 கோடி மற்றும் 140 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டது.இந்த இரண்டு பிரிவுகள் மட்டும் உணவு தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டில் 66 சதத்தைக் கவர்ந்தன என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.