February 3, 2023

கடந்த நவம்பரில் பெட்ரோல்-டீசல் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி: புள்ளிவவரம் தகவல்

புது தில்லி, டிச.8

கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து எரிபொருள் சந்தையின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளதாவது:

கடந்த 2021ம் ஆண்டின் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பரில் பெட்ரோல் விற்பனை 11.7 சதம் உயர்ந்து 26.6 லட்சம் டன்னாக இருந்தது.

மேலும், பண்டிகைக் காலம் காரணமாக கடந்த அக்டோபரில் எரிபொருளுக்கான தேவை அதிகமாக இருந்தது. எனினும், அந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த நவம்பர் மாத பெட்ரோல் தேவை 1.3 சதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசல், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த நவம்பரில் 27.6 சதம் அதிகரித்து 73.2 லட்சம் டன்னாக இருந்தது.

2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தைவிட கடந்த நவம்பரில் டீசல் விற்பனை 17.4 சதம் அதிகமாகும். அத்துடன், கொரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019ம் ஆண்டின் நவம்பர் மாதத்திய விற்பனையை விட 9.4 சதம் அதிகமாகும். டீசலின் மாதாந்திர விற்பனை கடந்த செப்டம்பரிலிருந்தே அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் மாத டீசல் விற்பனையான 62.5 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில், கடந்த நவம்பரில் அது 17.1 சதம் அதிகரித்துள்ளது.

மேலும், மதிப்பீட்டு மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு மிக அதிகபட்சமாக இருந்தது. கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்து விமானப் போக்குவரத்து மீண்டும் தொடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் விமான நிலையங்களில் ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்தது.

அதன் எதிரொலியாக, விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏடிஎஃப் எரிபொருளுக்கான தேவை கடந்த ஆண்டின் நவம்பருடன் ஒப்பிடுகையில் இந்த நவம்பரில் 21.5 சதவீதம் உயர்ந்து 5,72,200 டன்னாக இருந்தது. கடந்த நவம்பரில் மாதத்தில் சமையல் எரிவாயு விற்பனை முந்தைய ஆண்டின் அதே மாதத்து விற்பனையை விட 7.8 சதம் அதிகரித்து 25.5 லட்சம் டன்னாக இருந்தது. இது 2020-ஆம் ஆண்டின் நவம்பரை விட 8.4 சதமும் கொரோனாவுக்கு முந்தைய 2019 நவம்பரை விட 13.3 சதமும் அதிகமாகும். கடந்த அக்டோபரில் 23.9 லட்சம் டன்னாக எல்பிஜி நுகர்வுடன் ஒப்பிடும்போது, கடந்த நவம்பரில் அது 7.07 சதம் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love