வாஷிங்டன், ஜன.21
உலக அளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
குறிப்பாக சீனாவில் உருமாறிய கொரோனாதொற்றால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது. கடந்த டிசம்பர் 19-ந் தேதி முதல் கடந்த 15-ந் தேதி வரையிலான சுமார் 1 மாத காலகட்டத்தில் உலக அளவில் கொரோனா மரணங்கள் 20 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 டிசம்பர் 19 முதல் 2023 ஜனவரி 15 வரையிலான கடந்த 28 நாட்களில் சுமார் 1.3 கோடி புதிய பாதிப்புகளும், சுமார் 53 ஆயிரம் புதிய மரணங்களும் கொரோனாவால் நிகழ்ந்துள்ளன. இது முந்தைய 28 நாட்களை ஒப்பிடுகையில் முறையே 7 சதவீத சரிவும் (பாதிப்பு), 20 சதவீத அதிகரிப்பும் (மரணம்) ஆகும்’ என கூறியுள்ளது. கடந்த 15-ந் தேதி நிலவரப்படி உலக அளவில் மொத்தம் 66 கோடிக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 67 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.