February 3, 2023

கடந்த ஆண்டில் 1.85 லட்சம் டன் தேயிலை ஏற்றுமதி

புது தில்லி, ஜன.9

இந்தியாவில் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தேயிலை ஏற்றுமதி 18 சதம் கூடுதலாக 1.85 லட்சம் டன் அளவுக்கு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய தேயிலை வாரியம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் காமன்வெல்த் சுதந்திர நாடுகள் (சி.ஐ.எஸ்.) கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள் இந்தியாவிலிருந்து 0.43 லட்சம் டன் தேயிலையை இறக்குமதி செய்து வழக்கம் போல் முதலிடத்தில் உள்ளன. சிஐஎஸ் கூட்டமைப்பின் முக்கிய நாடான ர´யா மட்டும் 0.32 லட்சம் டன் தேயிலையை இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தபடியாக, 0.32 லட்சம் டன் இறக்குமதி செய்து ஐக்கிய அரபு அமீரகம் 2ம் இடத்திலும், 0.19 லட்சம் டன் இறக்குமதி செய்து ஈரான் 3ம் இடத்திலும் உள்ளன.

மேலும், பிரிட்டன் 0.08 லட்சம் டன்னும், அமெரிக்கா 0.1 லட்சம் டன்னும் இறக்குமதி செய்துள்ளன. மொத்தமாக, 1.85 லட்சம் டன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டைக் காட்டிலும் 18 சதம் கூடுதலாகும். கடந்த ஆண்டில் 1.60 லட்சம் டன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. தேயிலை வர்த்தகம் மூலமாக 2022ம் ஆண்டில் ரூ. 5,371 கோடி அந்நியச் செலாவணியை இந்தியா ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2021ம் ஆண்டில் ரூ. 4,875 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love