September 27, 2022

கடந்த ஆகஸ்ட் மாத சில்லரை வாகன விற்பனை 8.31 சதம் வளர்ச்சியடைந்தது: ஃபடா தகவல்

புது தில்லி, செப்.12

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த ஆகஸ்ட் மாத சில்லறை விற்பனை 8.31 சதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய ஆட்டோமொபைல் துறையின் அனைத்து முக்கிய பிரிவுகளிலும் வாகனங்களுக்கான முன்பதிவு அதிகரித்ததன் விளைவாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை விற்பனை 15,21,490-ஆக இருந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இது 14,04,704-ஆக இருந்தது. அந்த வகையில், கடந்த மாதம் இந்திய ஆட்டோமொபைல் துறையின் சில்லறை விற்பனை 8.31 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த மாதத்தில் கார்களின் சில்லறை விற்பனை 2,74,448-ஆக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திய சில்லறை விற்பனையான 2,57,672-உடன் ஒப்பிடுகையில் 6.51 சதம் வளர்ச்சியாகும்.

இது குறித்து ஃபடா அமைப்பின் தலைவர் மணீஷ் ராஜ் சிங்கானியா தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆகஸ்ட் மாத ஆட்டோமொபைல் சில்லறை விற்பனை அதிகமாக இருக்கலாம். எனினும், இந்த அதிகரிப்பு உற்சாகமளிக்கும் அளவில் இல்லை; விற்பனையாளா்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. விநாயகர் சதுர்த்தியுடன் பண்டிகைக் காலம் தொடங்குவதால் ஆகஸ்ட் மாத விற்பனை அமோகமாக இருக்கும் என்று விற்பனையாளர்கள் எதிர்பார்த்தனர்.

கொரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆகஸ்டில் ஆட்டோமொபைல் சில்லறை விற்பனை 7 சதம் குறைந்துள்ளது என்றார் அவர்.

Spread the love